பெங்களூரு: கர்நாடக மாநிலம் கார்வார்- அங்கோலா சட்டபேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்சம் டன் இரும்புத் தாது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அபராதம் விதித்தது.
இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்கத்துறை கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், சதீஷ் கிருஷ்ணா வருமான மற்றும் துறைமுக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ரூ.86.78 கோடி மதிப்பிலான இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தது தெரியவந்தது.
மேலும் கடந்த ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சதீஷ் கிருஷ்ணாவின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.14.13 கோடி முடக்கப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணாவை நேற்று முன்தினம் மாலை கார்வாரில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் கோவாவில் சூதாட்ட விடுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தியதாக சித்ரதுர்கா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.