புதுடெல்லி: தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0 என்ற கணக்கில் டெல்லியை சேர்ந்த சுதான்ஷு குரோவரை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாச்சார்ஜி 3-1 என்ற கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் பிரீயேஷ் ராஜ் சுரேஷையும், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையை சேர்ந்த எஸ்எஃப்ஆர் ஸ்நேகித் 3-2 என்ற கணக்கில் அசாமின் பிரியானுஜ் பட்டாச்சார்யாவையும், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஹர்மித் தேசாய் 3-2 என்ற கணக்கில் தமிகழத்தின் தருண் சண்முகத்தையும், டெல்லியின் பயாஸ் ஜெயின் 3-0 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் அங்கித் சென் சவுத்ரியையும் தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் தியா சித்தலே (ஆர்பிஐ), தனீஷா கோட்டேசா (மகாராஷ்டிரா), யஷஸ்வினி கோர்படே (பிஎஸ்பிபி), ரீத் ரிஷ்யா (பிஎஸ்பிபி) ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். தமிழகத்தின் செலினா தீப்தி 2-3 என்ற கணக்கில் சுதிர்தா முகர்ஜியிடமும் (ஆர்எஸ்பிபி), நித்ய மணி 1-3 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் சின்ட்ரலா தாஸிடமும் தோல்வி அடைந்தனர்.