மும்பை: நடப்பு நிதியாண்டில் (2025 – 26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக ‘பிட்ச்’ நிறுவனம் உயர்த்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ‘பிட்ச்’ ரேட்டிங் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்து சமீபத்தில் கணிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் (2025 – 2026) 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. முன்னதாக இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று இந்நிறுவனம் கூறியிருந்தது. தற்போது அதை உயர்த்தி அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், எதிர்பார்த்ததைவிட வலுவான பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வந்த சேவைகள், நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மாற்றியதாக பிட்ச் நிறுவனம் கூறியுள்ளது.
2025-26 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆக அதிகரித்தது. இது இந்திய ரிசர்வ் வங்கி கணித்த 6.5% வளர்ச்சியை விட அதிகம். மேலும் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கு முந்தைய 3 மாதங்களில் 7.4 சதவீதமாக இருந்தது. இது பிட்ச் நிறுவனம் கணித்த 6.7 சதவீதத்தை விட அதிகம்.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை, நிலையான வருவாய் போன்றவை காரணங்கள் என்று பிட்ச் நிறுனம் கூறியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையில் வர்த்தக உறவில் சிக்கல் அதிகரித்துள்ளது. எனினும், இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து 2026 நிதி ஆண்டில் நிலையான வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிட்ச் ரேட்டிங் கூறியுள்ளது.