சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், டிஎஸ்பி-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவாரூர் நகர தலைவர் ஜி.செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையின் வழிகாட்டுதல்களுடன் இந்து முன்னணி சார்பில் 36-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் சாமி ஊர்வலம் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றபோது, திருவாருர் டி.எஸ்.பி.மணிகண்டன் திட்டமிட்டு, ஊர்வலத்தினர், பக்தர்கள், சிறார்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், சாமி சிலை மற்றும் ஊர்வல தேரையும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே டி.எஸ்.பி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலிக்காத காவல்துறையை கண்டித்தும், வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, விநாயகர் ஊர்வலத்திற்கு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கினாலும், இரவு 7:45 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் அதிகாலை 4:30 மணி வரை நீடித்ததாகவும் குறிப்பிட்டார்.
ஊர்வலத்தை நடத்திய அனைவரும் குடிபோதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டதால், அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார். சாமி சென்ற தேர் மற்றும் சிலையை காவல்துறையினர் சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் வழக்கறிஞர் குமுதன் உறுதிபட தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி டிஎஸ்பி-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரிய இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்