திருச்சி: விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும், தொண்டர்கள் மரத்தில் ஏறி நிற்க கூடாது என்பன உள்ளிட்ட 23 நிபந்தனைகளுடன் திருச்சியில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்வதற்கு மாநகர காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு செப்.13-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல்துறையிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த போலீஸார் 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதன்படி, தவெக தலைவர் விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை வரும் விஜய், மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு சென்றுவிட வேண்டும். ஆனால், ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதியில்லை. விஜய்யின் வாகனத்துடன் மொத்தம் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் அக்கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது. கட்சித் தொண்டர்கள் மிக நீளமான குச்சிகளில் கொடியை கட்டி எடுத்து வரக் கூடாது. உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்க தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.
விஜய் வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாது. மேளதாளங்கள் இசைக்கக் கூடாது. அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. பார்க்கிங் வசதிகளை அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல்துறையினர் விதித்துள்ளனர். இதற்கு தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.