பாரிஸ்: பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரான்சுவா பேய்ரு பதவியை ராஜினமா செய்தார். புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னுவை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிராவும், புதிய பிரதமர் பாய்ருவுக்கு எதிராகவும் தலைநகர் பாரிஸிலும், வேறு சில நகரங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அனைத்தையும் தடுப்போம் என்ற பிரச்சாரம் ‘தலைமை’ இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டத்தை தொடக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்ட பிரான்ஸ் அரசு, பாதுகாப்புப் பணியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 80,000 போலீஸாரை நிறுத்தியது.
பாரிஸின் பெல்ட்வேயைத் தடுக்க போராட்டக்காரர்கள் முயன்றனர். சாலையில் தடுப்புகளை ஏற்படுத்திய அவர்கள், காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ரென் என்ற நகரில் ஒரு பேருந்துக்கு தீவைத்தனர். எனினும், போராட்டங்கள் தீவிரமடையாமல் தடுத்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை கைது செய்தனர்.