‘ஒருபுறம் இங்கிலாந்து போன்ற முக்கியமான டெஸ்ட் தொடர்களில் 3 போட்டிகளில்தான் ஆடுவார் என்பது பணிச்சுமை என்பது, அதேவேளையில் ஆசியக் கோப்பையில் அனர்த்தமான போட்டிகளிலெல்லாம் அவரை ஆட வைப்பது… இது என்ன தர்க்கம்?’ என்று அஜய் ஜடேஜா, இர்பாம் பதான் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சோனி ஸ்போர்ட்ஸுக்கு அஜய் ஜடேஜா கூறும்போது, “பும்ராவை இப்போது ஆடவைப்பதில் என்ன தேவை? பொதுவாக அவரை பஞ்சில் சுற்றி வைத்துப் போற்றிப் பாதுகாப்பீர்கள். இப்போது தேவையில்லாத போட்டிகளில் ஆட வைப்பீர்கள். இப்போது யுஏஇ அணிக்கு எதிராகக் கூட பும்ரா தேவைப்படுவார் போலும். ஒன்று, அவரை பாதுகாக்காதீர்கள் அல்லது இதுபோன்ற அனர்த்தமான போட்டிகளில் ஆடவைக்காதீர்கள். இதுதானே தர்க்கம்? ஆனால் தர்க்கப்படி எதையும் செய்வது நம் வழக்கமல்லவே. அதான் இப்படி” என்று நையாண்டி செய்துள்ளார். “பும்ரா இன்று ஆடினால் நான் ஸ்ட்ரைக் செய்யப்போகிறேன்” என்றார்.
ஜடேஜாவின் கருத்துக்கு ஆதரவாகப் பேசிய இர்பான் பதான், “பும்ராவைப் பாதுகாக்க வேண்டியதுதான், ஏற்றுக் கொள்கிறேன். இங்கிலாந்து தொடரிலும் இதைத்தான் சொன்னேன். ஒரு தொடருக்கு வந்தால் முழுவதும் ஆட வேண்டும். ஒரு தொடருக்கு நம் உடல்நிலையை மீட்டெடுக்கவோ பரமாரிக்கவோ நாம் வருவதில்லை. விளையாடத்தான் வந்திருக்கிறோம்.
அதுவும் இதுபோன்ற தொடர்களில் எதிரணியினரின் பலத்தைப் பொறுத்து பும்ராவை ஆடவைக்கலாம். ஒரு போட்டியில் பும்ரா, அர்ஷ்தீப் , வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் பிறகு ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஷிவம் டுபே என்று ஆடிவிட்டால் தொடர்ந்து அதே உத்வேகத்தைப் பராமரிக்க வேண்டும். திடீரென அடுத்த போட்டிக்கு பும்ராவுக்கு ஓய்வு என்று சொல்லக் கூடாது, ஆனால் இப்படிச் செய்தாலும் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் இருக்காது” என்றார் இர்பான் பதான்.
பும்ரா 14 மாதங்களுக்குப் பிறகு டி20 போட்டிகளுக்குத் திரும்புகிறார். பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகே பணிச்சுமை காரணமாக ஸ்ட்ரெஸ் பிராக்ச்சர் ஏற்பட்டு அவர் ஓய்வுக்குச் செல்ல வேண்டியிருந்தது. துபாய் ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா ஆடவில்லை. இப்போது இங்கிலாந்து தொடரில் 3 டெஸ்ட்கள் ஆடிய பிறகு இங்கு டி20-க்குத் திரும்பியுள்ளார். பொதுவாக பும்ராவைப் பற்றிய புரிதல், தெளிவு அணித் தேர்வுக் குழுவிடம் இல்லை என்பதே இவர்கள் இருவரின் குற்றச்சாட்டாக உள்ளது.