காத்மாண்டு: காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.
நேபாளத்தில் வெடித்த பயங்கர கலவரத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய பாதகமான சூழ்நிலை, ராணுவக் கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள புகை காரணமாக பாதுகாப்பு மீது கவலை எழுந்துள்ளதால், விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய பதற்றமான சூழல் காரணமாக, நேபாள உச்ச நீதிமன்றம் அனைத்து விசாரணைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து கோப்புகள், ஆவணங்கள் மற்றும் சேவையகங்கள் அழிக்கப்பட்டதாக தலைமை பதிவாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதன் காரணமாக, புதன்கிழமை திட்டமிடப்பட்ட விசாரணைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், வியாழக்கிழமை முதல் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் பின்னணி: சமூக வலைதளங்களில் அண்மையில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்தச் சூழலில் பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இது, நேபாள இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக 28 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நேபாளம் முழுவதும் வன்முறை, கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் காத்மாண்டுவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்தனர்.
நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றார். இந்தச் சூழலில் பிரதமர் சர்மா ஒலி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.