Last Updated : 10 Sep, 2025 05:36 AM
Published : 10 Sep 2025 05:36 AM
Last Updated : 10 Sep 2025 05:36 AM

சென்னை: திடீர் உடல் நலக்குறைவால் உயிருக்குப் போராடிய 2 வயது குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய சிறப்பு எஸ்ஐ-யை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். திருவொற்றியூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 26-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறைதீர் முகாம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட வினோத்குமார் என்பவரது 2 வயது ஆண் குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லை. இதை அங்கு பணியிலிருந்த தொற்றுநோய் மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ மாரிதுரை கவனித்தார், உடனடியாக அவர் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு பொதுமக்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் விரைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு குழந்தைக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளது. சாமர்த்தியமாக செயல்பட்டதால், குழந்தை காப்பாற்றப்பட்டதாகக் கூறி, அக்குழந்தையின் குடும்பத்தினர் சிறப்பு எஸ்ஐ மாரிதுரையை பாராட்டினர். இதையறிந்த காவல் ஆணையர் அருண் நேற்று மாரிதுரையை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
FOLLOW US