புதுடெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை காலவரையின்றி ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்டன. மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதில் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் நேற்று வாதிடுகையில், ‘‘குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளில் விடை உள்ளது.
அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக மசோதா மீது ஆளுநர் வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் வாதம் முரண்பாடாக உள்ளது. மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தலைமை வகிக்கும் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்.
மறுஆய்வு செய்யலாம்: சட்டத்தை இயற்றும் பொறுப்பு சட்டமன்றத்திடம் உள்ளது. குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகள் அடையாளப் பதவிகளாகும். இவர்கள் அமைச்சரவை ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும். இதை உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதமரையோ, ஆளுநர்கள் முதல்வர்களையோ மீறி செயல்பட முடியாது. குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகள், தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பை ரத்து செய்யாது. தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.
கேரள அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘மசோதாக்கள் மீது ஆளுநர்கள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். கிடப்பில் போடக்கூடாது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும் பட்சத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அமைச்சரவை ஆலோசனை வழங்கலாம். குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் பரிந்துரையை மாநில அரசே வழங்க முடியும்.
மசோதாக்கள் முரண்பாடு கொண்டிருந்தால் ஒப்புதல் அளிக்கும் முடிவை குடியரசுத் தலைவரும், ஆளுநரும் தாமதப்படுத்த முடியும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கும்படி இல்லை. மசோதாக்களை ஆராயும் அதிகாரம் நீதிமன்றங்களிடம் மட்டுமே உள்ளது’’ என்றார்.
பஞ்சாப் மாநில அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தர், ‘‘மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. சட்டமாகும் மசோதாவின் செல்லு படிதன்மையை முடிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியாது. மசோதா ஒப்புதல் அளிக்க 3 மாதம் கால நிர்ணயம் செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவசியமானது. இது தெளிவை தந்துள்ளது’’ என வாதிட்டார்.
மாணவர் சேர்க்கை: பல்வேறு விவகாரங்களில் கால நிர்ணயம் செய்வது, வழக்குகள் தாக்கல் செய்ய வழிவகுப்பதாக நீதிபதி பி.எஸ். நரசிம்மா குறிப்பிட்டார். இதற்கு மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தர், ‘‘மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை, வரி வழக்கு போன்றவற்றில் கால நிர்ணயம் அவசியமாகிறது.
அவசியமான நேரத்தில் 24 மணி நேரத்துக்குள் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும்’’ என வாதிட்டார். தெலங்கானா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, அமைச்சரவை ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டும் என வாதிட்டார். வாதங்கள் இன்றும் தொடர்கின்றன.