எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இருக்கிறது திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அண்ணன் சி.பி. குமரேசனின் வீடு. பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது எல்லாம் அதே பகுதி தான். மனைவி வசந்தியுடன் நம்மை வரவேற்ற குமரேசன், முதல் முறையாக ’இந்து தமிழ் திசை’யிடம் மனம் திறந்தார்.
உங்கள் குடும்பம் பற்றி..?
அப்பா பொன்னுசாமி கவுண்டர். அம்மா ஜானகி. நான், தம்பி ராது (சிபிஆரை அப்படித்தான் அழைக்கிறார்கள்). தங்கை மரகதவள்ளி என உடன்பிறந்தவர்கள் மூன்று பேர். அம்மா அரண்மனைப்புதூர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். திருப்பூர் நகர்மன்றத் தலைவராக கே.என்.பழனிசாமி இருந்தபோது எங்களது தந்தை திருப்பூர் நகராட்சியில் மேலாளராக பணியாற்றியவர்.
என்னது… உங்கள் தந்தை முன்னாள் நகராட்சி அதிகாரியா?
ஆம். திருப்பூருக்கு முதலாம் குடிநீர் திட்டம், கே.என்.பழனிசாமி சேர்மனாக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அப்போது எனது தந்தை தான், அதற்கான பணிகளை முழுமூச்சாக செய்தார். மிகவும் எளிமையானவர். ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்தவர். அப்போது திருப்பூர் நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாத போதும் மும்பை சென்று, எல்ஐசி-யில் கடன் பெறுவது வரை அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். திருப்பூர் வந்த காந்தியை பார்த்த பிறகு, கதரை மட்டுமே ஆடையாக உடுத்தியவர்.
இப்படியொரு வாய்ப்பை பாஜக தலைமை உங்கள் தம்பிக்கு தரும் என்று எதிர்பார்த்ததா உங்கள் குடும்பம்?
பெற்றோரின் ஆசிர்வாதம் தான் இன்றைக்கு தம்பி ராதுவை, இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. அவரது எண்ணம் தூய்மையாக இருந்தது. பெற்றோர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல் வர வேண்டும் என்று நினைத்தே தம்பிக்கு ராதாகிருஷ்ணன் என்று பெயர் வைத்தனர். அந்த அளவில், முன்னாள் நகராட்சி அதிகாரியின் மகன் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வந்திருப்பது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி.
ஏற்கெனவே துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் நெருக்கடி காரணமாகவே ராஜினாமா செய்ததாக எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனவே..?
ராது கொள்கைப் பிடிப்பாளி. எங்கள் குடும்பம் 3 தலைமுறைகளாக தேசிய நீரோட்டத்தில் தான் இருக்கிறோம். எங்களுக்கு இயல்பாகவே தேசப்பக்தி நிறைய உண்டு. தம்பி ராதுவின் இன்றைய வளர்ச்சிக்கு இறைவன் அருளும், அவருடைய உண்மையான உழைப்பும் தான் காரணம். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பார். ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பை வகித்த அனுபவம் இருப்பதால் இந்தப் பதவியிலும் அவர் திறம்படச் செயல்படுவார்”
பாஜக-வில் எத்தனையோ முன்னணி தலைவர்கள் இருக்கையில், உங்கள் தம்பிக்கு மட்டும் மாநிலத் தலைவர், எம்பி, ஆளுநர், தற்போது துணை ஜனாதிபதி அந்தஸ்து என தொடர்ந்து பதவிகளை கொடுத்து கவுரவப்படுத்துகிறதே பாஜக?
மோடியும், ராதுவும் 40 ஆண்டு கால நண்பர்கள். 2001-ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இக்கட்டான சூழ்நிலை. அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த ராது, மோடியை அழைத்து வந்து கோவை வஉசி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். நாடே மோடியை எதிர்த்தபோதும், அன்றைக்கு அவருக்கு ராது தைரியம் தந்தது இன்றைக்கும் எங்களுக்கு பசுமையாக நினைவில் உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது, ராது சற்று பதற்றமாக இருந்தார். அப்போது பிரதமர் மோடி கையை தட்டி அவரது பதற்றத்தைத் தணிக்கும் வகையில், “ராதா… ராதா” என
சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் ஒன்றான, துணை ஜனாதிபதி பதவிக்கு ராது மனுதாக்கல் செய்தபோது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இதைவிட வாழ்க்கையில் பெரிய மதிப்பு என்ன உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு தான் பாஜக ராதாகிருஷ்ணனை முன் நிறுத்தியுள்ளதா?
அதெல்லாம் ஒன்றுமில்லை… ராது துணிச்சல்காரர். எதற்கும் எப்போதும் பயப்படமாட்டார். ஏற்கெனவே கற்ற அரசியல் அனுபவங்களைக் கொண்டு, இனி துணை ஜனாதிபதி பொறுப்பிலும், அசத்துவார். அரசியலில், வென்றாலும் தலைக்கனம் இல்லாமலும் தோற்றாலும் வருத்தம் இல்லாமலும் தான் இருந்தார். அந்தளவு பக்குவப்பட்ட அவருக்கு நல்ல அரசியல் அனுபவமும் உள்ளது. 100 சதவீதம் அனைவருக்கும் நியாயமாக, நடுநிலையாக இந்தப் பொறுப்பில் ஜொலிப்பார்.
பொதுவாகவே துணை ஜனாதிபதி, ஜனாதிபதி பதவிக்கு வந்துவிட்டால், அரசியலில் இருந்து ஓய்வு கொடுத்துவிடுவார்கள். சிபிஆருக்கும் அப்படித்தானே இருக்கும்?
எதையும் தீர்மானிக்க முடியாது. எல்லாமே இறைவன் செயல்!