புதுடெல்லி: இந்தியாவுக்கான சீன தூதர் ஷு பெய்ஹோங் கூறியதாவது: நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் 88 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
இது, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதம் அதிகமாகும். இந்திய நிறுவனங்களைப் பொருத்தவரையில் இன்னும் அதிகமாக வரவேற்பதற்கு சீனா தயாராக உள்ளது. அதேபோன்று, சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் பாகுபாடற்ற வர்த்தக சூழல் இருக்கும் என்பதை நம்பிக்கையுடன் பார்க்கிறோம்.
வளர்ச்சி உத்திகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவுடன் நவீனமயமாக்கலில் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் சீனா தயாராக உள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், சீனாவில் முதலீடு செய்வதையும் நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும், சீன நிறுவனங்களுக்கு தேவையான பாகுபாடற்ற நியாயமான வர்த்தக சூழலை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வரலாற்றை நம்மால் மாற்றமுடியாது. ஆனால் எதிர்காலத்தை நாம் சிறந்தமுறையில் வடிவமைக்க முடியும். இவ்வாறு ஷு பெய்ஹோங் தெரிவித்தார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில் சீனா இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.