பாட்னா: தேர்தல் ஆணையம் பிஹார் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்ட நிலையில், ஒரு கிராமத்தில் இந்துக்கள் வீடுகளின் வாக்காளர் பட்டியலில் அதிகளவில் முஸ்லிம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்பூரில் சக்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கட்டேசர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மோகன்பூர் கிராம மக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, இந்த கிராமத்தில் வசிக்கும் இந்து குடும்பங்களின் வாக்காளர் பட்டியலில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, காலியாக உள்ள மற்றும் மிக குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட வீடுகளில் முஸ்ஸிம்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு தொழில்நுட்ப பிழையாக இருக்கமுடியாது என்றும் மாறாக திட்டமிட்ட பெரிய அரசியல் சதி என்றும் அந்த கிராம மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். 36,37 மற்றும் 38-ம் நம்பர் கொண்ட வீடுகளில் 15 முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வீடுகளில் முஸ்லிம்கள் யாரும் வசிக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காமேஷ்வர் தாக்குர் என்ற முதியவர் கூறுகையில், “எனது வீட்டு எண் 30-ல் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இப்போது, ரோஷன் கட்டூன் என்ற புதிய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கணவர் பெயர் முகமது ஷபீர் என்று உள்ளது. எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் யாரும் இல்லை.
ஆனால் அந்தப் பெயர் எங்கள் வீட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது” என்றார். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.