சென்னை சூளைமேட்டில் அண்ணாநெடும்பாதை, பஜனைகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை, மாலைவேளைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் அதிக குடியிருப்புகளையும், பல்வேறு வணிக வளாகங்களையும் கொண்ட பகுதிகளில் ஒன்றாக சூளைமேடு இருக்கிறது. வளர்ந்து வரும் சிறு நகரங்களில் ஒன்றாக திகழும் இங்கு பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கின்றனர்.
இதை யொட்டி அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, அமைந்தகரை, வடபழனி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. சூளைமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதற்கிடையில், சென்னை சூளைமேடு கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகும்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி.
சென்னை மாநகராட்சியின் சார்பில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சூளைமேட்டில் அண்ணா நெடும்பாதை, பஜனை கோயில் தெரு, வடஅகரம்சாலை, பெரியார்பாதை உட்பட பல இடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை பொருத்தவரை, எவ்வித முன் அறிவிப்புமின்றி, திடீரென பிரதான சாலையை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு, பூமியை தொண்டி பணியை தொடங்குகின்றனர்.
பஜனை கோயில் தெரு சாலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திடீரென பணியை தொடங்கினர். இதனால், இந்த சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இந்தவழியாக வழக்கமாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். ஒருகட்டத்தில், மாநகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவமும் நடைபெற்றது. இதையடுத்து, சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இதேபோல, அண்ணா நெடும்பாதையில் அதாவது கண்ணகி தெரு, ஆண்டவர் தெரு நுழைவு வாயிலை ஒட்டிய பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இதுபோல, கல்யாணராமன் தெருவின் இருபுறமும் நுழைவு வாயிலில், கல்யாணராமன் தெருவழியாக பஜனைகோயில் செல்லும் சாலையில் பணி தொடங்கியுள்ளது. இதனால், பஜனைகோயில் தெரு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.
சாலை துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அண்ணாநெடும்பாதை வழியாக செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, மந்த கதியில் நடைபெறும் பணியால் இந்தபாதை சுருங்கி இருந்த நிலையில், தற்போது, கூடுதல் வாகனங்கள் இந்த சாலை நோக்கி படையெடுத்து வருவதால், காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இது குறித்து, சூளைமேட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோஜ்குமார் கூறியதாவது: பல்வேறு இடங்களில் எந்தவித முன் அறிவிப்பு இன்றி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். அண்ணாநெடும்பாதையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிப்பதற்கு முன்பாகவே, கல்யாணராமன் தெருவை ஒட்டி பஜனைகோயில் தெருவில் பணியை தொடங்கி விட்டனர்.
இதனால், அண்ணாநெடும்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோல, பெரியார் பாதையிலும் பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.