திருப்பூர்: திருப்பூர் நல்லூர் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடந்தது. அதில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 2-ம் கட்ட முகாம், பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 46, 47 மற்றும் 48-வது வார்டுகளுக்கு, திருப்பூர் கூலிபாளையம் சாலை ஆர்.கே.ஜி. மண்டபத்தில் இன்று (செப்.9) நடைபெற்றது. இதில் அளவுக்கதிகமான பொதுமக்கள் திரண்டதால் கடும் நெரிசல் மற்றும் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்காதவர்கள் துவங்கி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின் கட்டணம் பெயர் மாற்றம், வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு, கட்டிட அனுமதி, பிறப்பு, இறப்பு சான்றுகள், ஆதார் திருத்தம், குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிப்பது, வாரிசு சான்று, வருவாய்த் துறை என 44 துறைகளுக்கு மனுக்களை பொதுமக்கள் தமிழ்நாடு முழுவதும் அளித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருப்பூரில் நடந்த முகாமில் போதிய முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்யத் தவறியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் கூறியது: ”மண்டபத்துக்கு வெளியே சாமியானா அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பலர் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்தனர். வரிசையில் நிற்கும் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. விண்ணப்பத்துக்கு சீல் வைக்க, ஒரே வரிசையில் பொதுமக்கள் நிறுத்தப்பட்டதால் கால்கடுக்க நிற்க முடியாமல், பலரும் முண்டியடித்துக்கொண்டு விண்ணப்பங்களை வழங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களை, கதவை அடைத்து வைத்துக்கொண்டு, ஆண்கள் நின்று கொண்டதால் பெண்கள் உள்ளே செல்லவே சிரமப்பட்டனர். அங்கு போதிய பெண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை நியமித்திருந்தால் பெண்கள் நிம்மதியாக உள்ளே சென்றிருக்க முடியும்.
அதேபோல் துறைவாரியாக தடுப்புகள் அமைத்து உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டதால் பலரும் அவதி அடைந்தனர். குறிப்பாக மண்டபத்தின் தரைதளத்தில் கடும் வெயிலின் காரணமாக, போதிய காற்றோட்டம் உள்ளிட்டவை இல்லாத காரணத்தால் குழந்தைகளை அழைத்து வந்த தாய்மார்கள் உட்பட பலரும் அவதி அடைந்தனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.