புதுடெல்லி: கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டரின் பயணக் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்கிறது. அதேநேரத்தில், விபத்து நேராமல் தடுப்பதற்கான தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது உத்தராகண்ட் மாநிலம். இதில் உள்ள புனிதத்தலமான கேதார்நாத்திற்கு மூன்று இடங்களிலிருந்து ஹெலிகாப்டர் பயண வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் வசதி அளிப்பதில் இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம்(யுசிஏடிஏ) கட்டணத்தை 49 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
புதிய கட்டணங்களின் கீழ், குப்த காஷியிலிருந்து ரூ.12,444, ஃபட்டாவிலிருந்து ரூ.8,900 மற்றும் சிர்சியிலிருந்து ரூ.8,500 என அதிகரிக்க உள்ளது. இந்த கட்டணங்கள் முன்பை விட நான்கு முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அதிகம். இதற்குமுன், குப்த காஷியிலிருந்து சுமார் ரூ.8,500க்கும், ஃபட்டா மற்றும் சிர்சியிலிருந்து சுமார் ரூ.6,500க்கும் டிக்கெட்டுகள் கிடைத்தன. எனவே, இனி ஹெலிகாப்டரில் சிவத்தலமான கேதார்நாத்தை தரிசிக்க அதன் பக்தர்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டி உள்ளது.
இது குறித்து யுசிஏடிஏயின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான், ‘பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த முறை ஹெலிகாப்டர் சேவைகளில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வானிலை குறித்த துல்லியமான மற்றும் நிகழ்நேர தகவல்களை வழங்கும் தானியங்கி வானிலை நிலையங்கள் நான்கு புனிதத் தலங்களிலும் நிறுவப்படுகின்றன.
இத்துடன், பிடிஜி கேமராக்கள், ஏடிசி, விஎச்எப் செட்கள் மற்றும் சீலோமீட்டர்களும் நிறுவப்பட உள்ளன. இதற்காக டெகரடூனின் சஹஸ்தரதாரா மற்றும் சிர்சியில் என இரண்டு கட்டுப்பாட்டு அறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. விமானங்களை தொடர்ந்து கண்காணிக்க தரைவழி கட்டுப்பாட்டுக்காக 22 ஆபரேட்டர்கள் கொண்ட குழு நிறுத்தப்படும். பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய அமைப்பு செயல்படுத்தப்படுகிறது.’ எனத் தெர்வித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் பத்ரிநாத் மற்றும் கங்கோத்ரி வழித்தடங்களில் ஹெலிகாப்டர் விபத்துகள் சற்று அதிகரித்தன. இதை தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்குமாறு டிஜிசிஏ உத்தராகண்ட் மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதற்காக, அம்மாநிலத்தின் உள்துறை செயலாளர் சைலேஷ் பகாலி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது, இது ஹெலிகாப்டர் சேவைகளின் பாதுகாப்பு குறித்து பல பரிந்துரைகளை வழங்கியது.
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு புதிய அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் யாத்திரையில் நடைபயணத்தின் சிரமத்தைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவையின் உதவியைப் பெறுகிறார்கள். பல பக்தர்கள் வயதானவர்களாகவும், நோய்வாய்ப்பட்டவர்களாகவும் உள்ளனர், அவர்களுக்கு இந்த வசதி மட்டுமே பயணத்தை முடிக்க ஒரே வழியாக அமைந்துள்ளது.
இப்பயணத்திற்கு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். இந்தமுறை யாத்திரைப் பயணத்திற்கான முதல் ஹெலிகாப்டர் சேவையும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு சாதாரண பக்தர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். இருப்பினும், புதிய தொழில்நுட்பத்துடனான ஏற்பாடுகளால், ஹெலிகாப்டர் சேவை பாதுகாப்பானதுடன் முன்பை விட சீரானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.