சிவகங்கை: திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள்’ வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக.29-ம் தேதி காலை ‘உங்களு டன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமாரை இடமாற்றம் செய்தும், அலுவலகத்தில் அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் மாவட்ட ஆட்சியர் எடுத்தார்.
தொடர்ந்து திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வட்டாட்சியர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத தால் 2 வாரங்களாகியும், மனுக்களைத் திருடிய நபரைக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். இதனிடையே திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை வரைவாளர் சரவணனுக்கு 17 ‘பி’-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவுட்சோர்சிங்கில் பணிபுரியும் புல உதவியாளர் அழகுப் பாண்டியை பணிநீக்கம் செய்யவும் நில அளவைத்துறை உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதாகக் கூறப் படுகிறது.
போலீஸ் விசாரணை முடி வடையாத நிலையில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முற்சிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நில அளவைத் துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று முறையிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலச் செயலாளர் அருள்ராஜ் வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த் துறைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பிய மனு வில் கூறியிருப்பதாவது: ஆக.26-ம் தேதி சமர்ப்பிக்கப் பட்ட பட்டா மாறுதல் கோப்பு களுக்கு ஆக.26 இரவு, ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வட்டாட்சியர் ஒப்புதல் அளித்தார்.
ஆக.28-ம் தேதி காலை சில நத்தம் பட்டா உட்பிரிவு கோப்புகளை மட்டுமே நில அளவைப் பிரிவிடம் திருப்பிக் கொடுத்தார். மீதிக் கோப்புகளைக் கொடுக்கவில்லை. நில அளவைப் பிரிவிடம் கொடுத்த கோப்புகளில் எதுவும் காணாமல் போகவில்லை. ஆனால், முதுநிலை வரைவாளர் சரவணன் மற்றும் லெட்சுமிபிரியா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு 17 ‘ஏ’ குறிப்பாணை வழங்கப் பட்டது. கோட்டாட்சியர் முறையாக விசாரிக்கவில்லை.
அதோடு போலீஸ் விசா ரணை முடிவடையாத நிலையில் ஒருதலைப்பட்சமாக சந்தேக அடிப்படையில் நில அளவை ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.