ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக் காலி செய்யத்தான் ஷுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளனர் என்பதே அது. இது உண்மைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர்.
டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் இல்லாத போது பதிலி தொடக்க வீரராகத்தான் சஞ்சு சாம்சன் ஆடினார், என்று அஜித் அகார்கர் கம்பீரின் நோக்கத்திற்கேற்ப ஒரு அபிப்ராயக் குண்டைத்தூக்கிப் போட்டார். கடந்த சீசனில் 3 சதங்களை விளாசிய சாம்சனைத் தூக்குவதா? கில் எங்கிருந்து வந்தார்? போன்ற கேள்விகளை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் எழுப்பி விட்டனர். சுனில் கவாஸ்கர் மட்டும்தான் வயதாகிவிட்டதால் தனக்கேயுரிய கருத்துச் சொதப்பலில் யாரும் கேள்வி கேட்காதீர்கள், வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணித்தேர்வில் தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கில்லுக்கே கஷ்டம்தான் என்று கூறினார். “சஞ்சு சாம்சன் டாப் 3 வீரர்களில் அபாயகரமான பேட்டர். அவரை தொந்தரவு செய்யக்கூடாது, அதே இடத்தில் அவரை விட்டு விட வேண்டும்.
சஞ்சு சாம்சனுக்குப் பதிகால கில்லைக் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல. டி20 களில் டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் வலுவான ரெக்கார்டுகளை வைத்துள்ளார். ஷுப்மன் கில் கூட சஞ்சு சாம்சன் இடத்தை இட்டு நிரப்ப முடியாது.
ஷுப்மன் கில் வேறு ஒருவர் இடத்தில் வந்து ஆடட்டும். தொடக்க வீரராக சாம்சனைத் தொந்தரவு செய்யக் கூடாது, அப்படியே அவரைத் தொடர அனுமதிக்க வேண்டும். டி20-யில் இதுவரை எப்படி ஆடினாரோ அதே பாணியில் அவர் தொடர வேண்டியதுதான். டாப் நிலையில் சஞ்சு பெரிய ரன்களுடனும், சதங்களுடனும் மிகவும் சீரான முறையில் இருந்து வருகிறார்.” என்றார் சாஸ்திரி.
சஞ்சு சாம்சன் மொத்தமாக 38 டி20 சர்வதேசப் போட்டிகளில் 861 ரன்கள், 111 அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர், ஸ்ட்ரைக் ரேட் 152. மூன்று சதங்கள் 2 அரைசதங்கள். தொடக்க வீரராக 17 போட்டிகளில் 522 ரன்கள். அதிகபட்சம் 111. ஸ்ட்ரைக் ரேட் 179. 3 சதங்கள் ஒரு அரைசதம். இப்படியிருக்கையில் இவரை மாற்ற வேண்டும் என்று எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள்? குஜராத் டைட்டன்ஸ் லாபியா? விளம்பரதாரர் லாபியா? என்னவென்று புரியவில்லை.