புதுடெல்லி: அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்து உள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
இதையடுத்து, இந்திய பொருட்களுக்கு அமெ ரிக்கா 50% வரி விதித்தது. இதனால் ஜவுளி, மீன் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, பிரதமர் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும் ஆனால் அவரின் சில நடவடிக்கைகளை நான் விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். இதுபோல இந்தியா, அமெரிக்கா இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்த சூழலில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் கூறும்போது, “ஓரிரு மாதங்களfல் இந்தியா விரைவில் பேச்சுவார்த்தைக்கு வரும். அப்போது அவர்கள் மன்னிப்பு கோரிவிட்டு, அதிபர் ட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள்” என்றார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறும்போது, “இந்தியாவைவிட சீனாவும் துருக்கியும் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்குகிறது. இதுபோல ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து சில பொருட்களை இறக்குமதி செய்கின்றன. ஆனாலும், அந்த நாடுகளைவிட இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கிறது. இது அமெரிக்காவின் தவறான கொள்கை.
அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் இறையாண்மை கொண்ட நாடு என்பதை லுட்னிக் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொந்த இறையாண்மை முடிவுகளை எடுக்கலாம். நாமும் நமது இறையாண்மை முடிவுகளை எடுக்கலாம். இந்த விவகாரத்தில் இந்தியா மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொண்டுள்ளது.
எனவே, அமெரிக்காவிடம் மன்னிப்பு கோருவதற்கு எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அமெரிக்காவின் முந்தைய நிர்வாகம்தான் (ஜோ பைடன்) ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவை ஊக்குவித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்க இந்த நடவடிக்கை உதவும் என முந்தைய அரசு கருதியது” என்றார்.