சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சேலத்தில் அவரது இல்லத்தில் சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பினார்.
அவரை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே.செல்வராஜ், வெங்கடாசலம், முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் பழனிசாமி, ஈரோடு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும், அவருக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை ரகசியமாக கண்காணித்து களையெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக கட்சியினருடன் அதிமுக பொதுச் செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டார்.