வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவில் அதிபர் ட்ரம்ப் (பரஸ்பர வரி) வரி விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், ட்ரம்பின் உத்தரவு சட்டவிரோதமானது என்று கடந்த மே மாதம் அறிவித்தது. இதை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சர்வதேச வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
எனினும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக இந்த தீர்ப்பை அக்டோபர் 14 வரை தள்ளி வைத்தது. இந்நிலையில், அமெரிக்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதம் என்ற கீழ் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், வசூலாகும் வரியில் 50 சதவீதத்தை திருப்பித் தர வேண்டியிருக்கும். இதனால் கருவூலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஆனாலும், நீதிமன்றம் உத்தரவிட்டால் திருப்பித் தருவோம். அதேநேரம், வரி விஷயத்தில் வேறு வழிகள் குறித்தும் ஆராயப்படும்’’ என்றார்.
இதுபோல தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குநர் கெவின் ஹசெட் கூறும்போது, “ட்ரம்ப் நிர்வாக முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், வரிகளை தொடர்ந்து அமல்படுத்த வேறு சில சட்ட ரீதியான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.