சென்னை: வானியல் அபூர்வமான முழு சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. கிரகணத்தின்போது, அழகிய சிவப்பு நிறத்தில் காணப்பட்ட சந்திரனை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் எனவும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி கிரகணம் எனவும் கூறப்படுகிறது. பவுர்ணமி நாளில் மட்டுமே சந்திர கிரகணம் நிகழும்.
அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து, 2-வது சந்திர கிரகணம் நேற்று நிகந்தது. இந்திய நேரப்படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை கிரகணம் தெரிந்தது. அதில் முழு சந்திர கிரகணத்தை நள்ளிரவு 11.42 முதல் 12.33 மணி வரை காண முடிந்தது. அப்போது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) எனப்படும் முழுமையான அடர் சிவப்பு நிறத்தில் சந்திரன் காட்சியளித்தது.
ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லான்டிக், ஆர்டிக் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, இந்தியாவில் இரவு நேரம் என்பதால் பல்வேறு இடங்களில் சந்திர கிரகணத்தை மக்கள் தெளிவாக கண்டு ரசித்தனர். தமிழகத்தில் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2028 டிசம்பர் 31-ம் தேதிதான் நடைபெறும். அதேபோல, செப்டம்பர் 21, 22-ம் தேதிகளில் நிகழ உள்ள பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக், அட்லான்டிக் மற்றும் அன்டார்டிகாவின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.