சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டு தீவாவளி பண்டிகை அக்.20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
இதையடுத்து, பயணிகள் நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைகால ரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். எனவே, பயணிகள் தேவை மிக்க வழித்தடங்களில், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். விரைவு ரயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.
குறிப்பாக, கொல்லம், செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.