2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வென்ற ஒரே எம்பி என்பதால் அரசியல் களத்தில் தனிக்கவனம் பெற்றவர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். ஓபிஎஸ் மகன் என்ற அடையாளம் இருந்தும், ஐந்து ஆண்டுகள் எம்பி-யாக இருந்தும் தென் மாவட்டங்களை தாண்டி ரவீந்திரநாத்தின் அரசியல் விரிவடையவில்லை. இந்த நிலையில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் முதல் செங்கோட்டையனின் பதவி பறிப்பு வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் ஓ.பி.ரவீந்திரநாத்.
ஆர்வத்தால் அரசியலுக்கு வந்தீர்களா… வாரிசுக் கோட்டாவில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததா?
எனது தந்தை பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில், அவர் ஆற்றிய பணிகளை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அரசியல் மூலமாக அதிகாரத்துக்கு வந்தால், ஏழை மக்களுக்கு தேவையானதை செய்ய முடியும் என்பதாலும் அதிமுக-வை வழிநடத்திய அம்மா மீது கொண்ட ஈர்ப்பாலும் தான் அரசியலுக்கு வந்தேன்.
ஜெயலலிதாவை முதன் முதலாக எப்போது சந்தித்தீர்கள்?
திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த அம்மாவை, பார்க்க, விருந்தினர் மாளிகை முன், எனது தந்தையுடன், 12 வயது சிறுவனாக காத்திருந்தேன். அவரது கான்வாய் வரும்போது ஏற்பட்ட நெரிசலில், போலீஸார் என்னைத் தள்ளிவிட்டனர். இதை காரில் இருந்து கவனித்த அம்மா, என்னை அழைத்து விசாரித்தார். அப்போது, உடனிருந்த எனது தந்தை, பெரியகுளம் நகரச் செயலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “நன்றாகப் படிக்க வேண்டும்” என்று அம்மா என்னை வாழ்த்தி அனுப்பினார். அதுதான் எனக்கும் அவருக்குமான முதல் சந்திப்பு.
இபிஎஸ்ஸை எப்போது முதன்முதலில் சந்தித்தீர்கள். உங்கள் அரசியல் வருகை குறித்து அவர் என்ன சொன்னார்?
இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தபோது, சேலம் மாவட்ட நிகழ்வுகளின் போது இபிஎஸ் அறிமுகமானார். அதன்பின், ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்து பணியாற்றினேன். 2019 மக்களவைத் தேர்தலின் போது, விருப்பமனு கொடுத்து, நேர்காணலின் போது அவரைச் சந்தித்தேன்.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலுக்குப் முன்பு, கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் பூசல்கள் ஏற்பட்டன. அந்த சமயத்தில், நான் இபிஎஸ்ஸை சந்தித்து, “தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எங்கள் தரப்பினரை அமைதிப்படுத்தி, ஒற்றுமையை ஏற்படுத்துகிறேன்” என்று கேட்டேன். ஆனால், இபிஎஸ் அதில் ஆர்வம் காட்டாததுடன் அனுமதி மறுத்துவிட்டார். எனது அரசியல் வருகையை அவர் விரும்பினாரா என்பதை இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
அதிமுக-வில் சீனியர்களை ஒதுக்கிவிட்டு, ஒருங்கிணைப்பாளரின் மகன் என்பதால் 2019 மக்களவைத் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது சரியா?
பெரியகுளம் தொகுதியில் 2001-ல் ஓபிஎஸ் ஐயா போட்டியிட்டபோது, கொடைக்கானல் பகுதியில் எனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. அப்போதே நான் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டேன். அதன்பின், ஒவ்வொரு தேர்தலிலும் நான் பணியாற்றியுள்ளேன். அதோடு கேரள மாநிலத்தில் பீர்மேடு பஞ்சாயத்துத் தேர்தலில் வேலை செய்து அதிமுக-வை சேர்ந்தவரை தலைவர் ஆக்கினோம். அதேபோல், தேவிகுளம் பகுதியிலும் அதிமுக-வை வெற்றி பெற வைத்தோம்.
2006-ம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்புக் கேட்டு வந்துள்ளேன். ஆனால், 2019-ல் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. இளைஞர் பாசறை செயலாளர் பதவியை டாக்டர் வெங்கடேஷ் எனக்கு வழங்க முன்வந்தபோது, ஓபிஎஸ் ஐயா தடுத்தார். அதன்பின் அம்மாவின் கவனத்திற்கு போய், அவரிடம் அனுமதி பெற்றுத்தான் அந்த பொறுப்புக்கூட எனக்குக் கிடைத்தது. எனவே, ஓபிஎஸ் பையன் என்பதற்காக நான் ஒருபோதும் சலுகை கேட்டதில்லை.
உங்கள் பார்வையில் அதிமுக-வின் சரிவு எப்போது தொடங்கியது?
ஒரு சிலரின் சுயநலத்தால், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு என்றைக்கு பாதிப்பு ஏற்பட்டு, பிரிவு வந்ததோ, அப்போதே சரிவு தொடங்கிவிட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கான விதிகள் மாற்றப்பட்டதன் மூலம், எம்ஜிஆர், அம்மா ஆகியோர் தொண்டர்களுக்கு வழங்கிய உரிமை பறிக்கப்பட்டதே சரிவுக்குக் காரணம்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர், முதல்வர், துணை முதல்வர் என்றெல்லாம் அதிகாரத்தில் இருந்த ஓபிஎஸ், தனக்கென ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ளாதது அவரது பலவீனம் தானே?
அம்மாவின் செல்லப்பிள்ளையாக ஓபிஎஸ் ஐயா இருந்தார். அவரது வாக்கை வேதவாக்காக எடுத்துச் செயல்பட்டார். இதனால், தனக்கான ஆதரவாளர் வட்டம் என அவர் எப்போதும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தன்னால் கட்சி பலவீனம் அடைந்து விடக்கூடாது என்பதே அவரின் ஒரே எண்ணமாக இருந்தது. அதற்காக, பல அவமானங்களையும், சோதனைகளையும் அவர் சந்தித்தார். இது அவரது பலவீனம் அல்ல; பலம் என்பது வருங்காலங்களில் தெரியும்.
தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஓபிஎஸ் எதுவும் செய்யவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறதே?
ஓபிஎஸ்ஸை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை. நம்பாமல் கெட்டவர்கள் தான் பலர் உள்ளனர். அதோடு, 1996-ல் அதிமுக தோல்வி அடைந்தபோது, முன்னணி நிர்வாகிகள் பலர் அம்மாவை விட்டு விலகிச் சென்றனர். அதன்பின் உண்மை புரிந்து மீண்டும் இணைந்தனர். அதுபோல, இபிஎஸ் வலையில் இப்போது சிக்கியவர்கள், விரைவில் உண்மையைப் புரிந்து, கட்சியைக் காப்பாற்ற மீண்டும் ஓபிஎஸ் உடன் இணைவார்கள்.
தர்மயுத்தத்தை கைவிட்டு, பாஜக சொன்னதைக் கேட்டு இபிஎஸ் உடன் ஆட்சியையும் கட்சியையும் ஓபிஎஸ் பகிர்ந்து கொண்டது தவறு என இப்போது நினைக்கிறீர்களா?
2016 தேர்தலில் அம்மா உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியை ஏற்படுத்தி சாதனை படைத்தார். அந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் ஐயா இந்த முடிவை எடுத்தார். ஒபிஎஸ் மட்டும் அப்போது ஒத்துழைப்புக் கொடுத்திருக்காவிட்டால், நான்கரை ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது.
கடந்த ஏழு ஆண்டுகளாக, பாஜக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஓபிஎஸ் வழங்கினார். ஆனால், அவர்கள் தற்போது அவரை கைகழுவி விட்டார்களே… இதற்கு இபிஎஸ் தான் காரணமா?
இதை பாஜக தலைவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
2019 தேர்தலில் வென்ற உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பாஜக-விடம் ஓபிஎஸ் வலியுறுத்தியதாக தகவல் வெளியானதே?
அப்போது தமிழகத்தில் என்டிஏ சார்பில் நான் மட்டும்தான் வெற்றி பெற்றேன். இதற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் பட்டியலில் எனது பெயரை பிரதமர் மோடி சேர்த்து விட்டார். பதவி ஏற்பு நாளன்று, காலையிலேயே இது தொடர்பான தகவல்கள் வெளியாயின. அந்த சமயத்தில் என்னோடு சேர்த்து, அதிமுக ராஜ்யசபா எம்பி ஒருவருக்கும், மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பாஜக-விடம் இபிஎஸ் டிமாண்ட் வைத்தார்.
ஆனால், பிஹாரில் 11 எம்பி-க்களைக் கொண்ட நிதிஷ்குமார் கட்சிக்கே, ஒரு அமைச்சர் பதவி தான் வழங்கப்பட்டுள்ளது. அதனால், உங்களுக்கு 2 அமைச்சர் பதவி வழங்கமுடியாது என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அந்த நிலையில், “கட்சியில் குழப்பம் வரும் என்றால், எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்” என நான் விலகிக் கொண்டேன். ஆக, பிரதமர் விருப்பப்பட்டு எனக்குக் கொடுத்த அமைச்சர் பதவியை கிடைக்கவிடாமல் தடுத்தவர் இபிஎஸ்.
ராமநாதபுரத்தில் இரட்டை இலையை தோற்கடிக்க ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டது கட்சிக்கு செய்த துரோகம் இல்லையா?
அதிமுக-வின் சட்ட விதிகளை மாற்றி, தற்காலிகமாக இரட்டை இலை சின்னத்தை அவர்கள் பெற்ற சூழ்நிலையில், ஓபிஎஸ் அந்த முடிவை எடுக்க வேண்டி வந்தது. கட்சிக்காக உழைத்த உண்மை தொண்டனை, காரணமின்றி சூழ்ச்சி செய்து, கட்சியிலிருந்து நீக்கியது தான் துரோகம்; ஓபிஎஸ் செய்தது துரோகம் இல்லை.
அம்மாவின் தொண்டர்கள் உங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றால் ஏன் தனிக்கட்சி தொடங்கக் கூடாது?
தனிக்கட்சி என்று ஆரம்பித்தால் காட்சிகள் மாறும். என்ன நோக்கத்திற்காக ஓபிஎஸ் ஐயா இந்தப் போராட்டத்தைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் மாறிவிடும். அதிமுக-வின் ஆணிவேரான தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டது நியாயப்படுத்தப்பட்டுவிடும். நிச்சயமாக எங்கள் போராட்டம் வெற்றி அடையும். அதனால், தனிக்கட்சி தொடங்குவதற்கான தேவை ஏற்படாது.
துணை முதல்வர் உதயநிதியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?
பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர். முன்பை விட இப்போது பக்குவம் அடைந்து இருக்கிறார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின், “அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று ஓபிஎஸ் சொன்னதன் அர்த்தம் என்ன?
தமிழக மக்கள் நலனுக்காக, இறைவனால் தீர்மானிக்கப்படும் முடிவுப்படி, தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ் ஐயா நல்லதொரு முடிவை எடுப்பார் என்பது தான் அர்த்தம்.
வரும் தேர்தலில் விஜய்யின் தவெக தாக்கதை ஏற்படுத்துமா?
சகோதரர் விஜய் சினிமாவில் நுழைந்தபோது கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர். அதைத் தாண்டி, தனது கடின உழைப்பால் உச்சம் தொட்டவர். அவர் தன்னிடம் உள்ள இளைஞர் பட்டாளத்தின் நம்பிக்கையை தக்கவைத்தால், தேர்தலிலும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்.
உங்கள் அணியினர் தவெக உடன் கூட்டணி வைக்கவோ, இணையவோ வாய்ப்புள்ளதா?
தேர்தல் நேரத்தில், தொண்டர்கள் எதை விரும்புகிறார்களோ அதை ஓபிஎஸ் செய்வார்.
2026 தேர்தலில் திமுக – தவெக இடையில் தான் போட்டி என விஜய் சொல்கிறாரே..?
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக வேண்டும் என்பதற்காக விஜய் கட்சி தொடங்கி உள்ளார். எனவே, அவரும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார். எனவே, அவர் இப்படி சொல்வதில் வியப்பு ஒன்றுமில்லை.
அதிமுக-வை ஒருங்கிணைக்க இபிஎஸ்ஸுக்கு, செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதுபற்றி யோசிப்பதற்குப் பதிலாக அவரது கட்சி பொறுப்புகளை பறித்து பதிலடி கொடுத்துள்ளாரே இபிஎஸ்?
கோடிக் கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான அதிமுக என்ற ஆலமரத்தின் விழுதுகளை வெட்டுவதோடு, வேர்களிலும் வெந்நீர் பாய்ச்சும் செயலைச் செய்கிறார்கள். சில சுயநலவாதிகளும் இதனை அருகில் இருந்து வேடிக்கை பார்க்கின்றனர். இவர்களுக்கு உரிய பாடம் புகட்டி, விசுவாசம் மிக்க தொண்டர்கள் இவர்களை திருந்த வைப்பார்கள். வரப்போகும் நாட்களில் இது நடக்கும்.