உளுந்தூர்பேட்டையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை 10 தினங்களுக்குள் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளரும், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் கட்சியின் பொதுச் செயாலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரையும் நீக்கினார். இதனிடையே ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் போஸ்டர் ஒட்டினர்.
இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம், ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம் என்ற வாசகங்களுடன், கழக மூத்த முன்னோடி செங்கோட்டையனின் முயற்சிக்கு நன்றி என குறிப்பிட்ட மாவட்டக் கழக செயலாளர் க.வேங்கையன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும், அவரது வலதுகரமாக செயல்படக்கூடிய உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏ குமரகுரு உளுந்தூர்பேட்டையில் வசிப்பதால், அவரின் அதிருப்தியாளர்கள் இந்த சுவரொட்டிகளை ஒட்டியிருக்கக் கூடும் என்கின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவினர்.