சென்னை: முதல்வரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்று வரும் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டத்தின் 200-வது நாளில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவளித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு 24-வது நாளில் அமைச்சர் சக்கரபாணி, 30-வது நாளில் அமைச்சர் கோவி.செழியன், 50-வது நாளில் ஆர்.காந்தி, 75-வது நாளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 100-வது நாளில் அமைச்சர் எ.வ.வேலு, 125-வது நாளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 150-வது நாளில் அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், 175-வது நாளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டத்தின் 200-வது நாளான நேற்று, கொளத்தூர் மேற்கு பகுதியில் உள்ள தென் பழனி நகர், நேரு தெரு, சீனிவாசன் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பங்கேற்று பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “விஜய் போன்ற சிலர் தனியாக அரசியலுக்கு வரலாம். அவர்களால் உண்மையான மாற்றத்தை கொண்டுவர முடியாது. அந்த கூட்டத்தில் வந்தவர்களில் பலர் 10, 12, 13 வயதுடைய ஓட்டு போடத் தெரியாத சிறுவர்கள் தான்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, திமுக பகுதிச் செயலாளர்கள் எ.நாகராஜன், ஐசிஎப்.முரளிதரன், கூ.பீ.ஜெயின், வே.வாசு, மண்டலக் குழு தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.