கீவ்: ‘‘ரஷ்ய தாக்குதலில் நொறுங்கிய கட்டிடங்களை கட்டிவிடுவோம். ஆனால், உயிரிழந்தவர்களை திரும்ப வருவார்களா?’’ என்று உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்டென்கோ தெரிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ படையில் சேர உக்ரைன் திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் இருதரப்புக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நேற்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் தாய், 3 மாத குழந்தை உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயம் அடைந்தனர். கீவ் நகரில் உள்ள கேபினட் அமைச்சர்களின் கட்டிடத்தின் மீது ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் கட்டிடத்தின் மேல் தளங்கள் தீப்பற்றி எரிந்தன.
இதுகுறித்து உக்ரைன் விமானப் படை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கீவ் நகர் மீது ரஷ்யா ஏவிய 747 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம். அதேபோல் ரஷ்யாவின் 4 ஏவுகணைகளும் வீழ்த்தப்பட்டன. ஆனால், 9 ஏவுகணைகள், 56 ட்ரோன்கள் கீவ் நகரின் பல பகுதிகளை தாக்கின’’ என்றனர்.
உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்டென்கோ நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உக்ரைனின் மிக முக்கியமான அரசு கட்டிடம் மீது ரஷ்யா நேற்று முதல் முறையாக தாக்குதல் நடத்தியது. நொறுங்கிய கட்டிடங்களை நாங்கள் மீண்டும் கட்டிவிடுவோம். ஆனால், உயிரிழந்தவர்கள் திரும்ப வரமாட்டார்கள். இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் எண்ணெய், காஸ் விஷயத்தில் கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.