தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது பற்றி இன்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், 1940-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் படங்கள் இயக்கிய முதல் இயக்குநர், ஒய்.வி.ராவ் என்றழைக்கப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ். அவர் காலத்தில் இது பெரிய சாதனை. அவர் தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று, ‘சாவித்திரி’. மகாபாரதத்தில் வரும் ‘சத்யவான் சாவித்திரி’ கதைதான்.
துயுமத்சேனன் என்னும் சால்வ நாட்டு மன்னன் போரில் தோல்வியடைந்து, தன் மனைவி, மகன் சத்யவானோடு காட்டில் வாழ்ந்து வருகிறார். அந்தக் காட்டுக்குத் தன் தந்தை அஸ்வபதியோடு வரும் சாவித்திரி, சத்தியவானின் அழகில் மயங்கி காதல் கொள்கிறாள். அவனைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தந்தையிடம் சொல்கிறாள். அப்போது அங்கு வரும் நாரதர், ‘சத்தியவானின் ஆயுள் இன்னும் 12 மாதங்களே’ என்று எச்சரிக்கிறார். ஆனால், சாவித்திரி, ‘சத்தியவானை கணவனாக நினைத்துவிட்டதால், மணந்தால் அவரையே மணப்பேன்’ என்கிறார், தந்தையிடம்.
மகளின் மன உறுதியை அறிந்த அஸ்வபதி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். நாரதர் சாவித்திரியிடம், ‘சில நோன்பு முறைகளை உபதேசிக்கிறேன். அதை பக்திபூர்வமாகக் கடைப்பிடித்தால், நன்மைகள் கிடைக்கும்’ என்கிறார். ஏற்கும் சாவித்திரி, அதைத் தொடர்கிறாள். நோன்பு முடியும் நாளில் சத்தியவான் உயிர் துறக்கிறான். அவன் உயிரைக் கவர்ந்து செல்ல அங்கு வருகிறான் எமன். ‘சத்தியவான், தர்மத்தில் சிறந்தவன் என்பதால் அவனை அழைத்துப் போக நானே வந்தேன்’ என்கிறார் எமன்.
சாவித்திரி அவனை பின் தொடர்கிறாள். மனமிறங்கிய எமன், ஒரு வரம் தருவதாகவும், சத்தியவானின் உயிரைத் தவிர, எதையும் கேட்கலாம் என்கிறார். காட்டில் வாழும் சத்தியவானின் தந்தை துயுமத்சேனன் மீண்டும் ஆட்சியையும் பார்வையையும் பெற வேண்டும் என்று கேட்க, எமன் தருகிறார். சாவித்திரி மீண்டும் பின் தொடர்கிறாள். பிறகு ஒவ்வொரு வரமாக அவர் தர, கடைசியில், மனம்தளராமல் கணவன் உயிரை எப்படி மீட்கிறார் என்று கதை செல்லும்.
மதுரையைச் சேர்ந்த ராயல் டாக்கி பட விநியோக நிறுவனத்துக்காக, இதை இயக்கிய ஒய்.வி.ராவ், படத்தில் சத்யவானாகவும் நடித்தார். சாவித்திரியாக இந்தி மற்றும் மராத்தி நடிகையான சாந்தா ஆப்தே நடித்தார். அவருக்குத் தமிழ் தெரியாது என்றாலும் இந்தப் படத்துக்காகக் கற்றுக் கொள்வேன் என்றார். அவருக்கு, இப்படத்தின் வசனகர்த்தா வடிவேலு நாயக்கரும், புனேவில் செட்டிலாகிவிட்ட மயிலாப்பூர் பெண் ஒருவரும் தமிழ்க் கற்றுக் கொடுத்தனர். சாந்தா ஆப்தே, புனேவில் பிரபலம் என்பதால் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, மாறுவேடத்தில் அப் பெண்ணின் வீட்டுக்கு, வேலைக்காரி போல சென்று ஒரு வருடம் தமிழ் கற்றிருக்கிறார். பின்னர் படத்தில் 7 பாடல்களையும் பாடியிருக்கிறார், அவர்.
இதில் நாரதராக, பிரபல கர்னாடக இசைப் பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். தென்னிந்திய சினிமாவில் நாரதராக ஒரு பெண் நடித்தது அதுவே முதல் முறை. அவர் வானத்தில் நடப்பது போன்ற காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் இருந்த காம்பவுண்ட் சுவரில் நடக்க வைத்து எடுத்திருக்கிறார்கள்.
வி.ஏ.செல்லப்பா, கே.சாரங்கபாணி, கே. துரைசாமி, டி.எஸ். துரைராஜ், சாரதாம்பாள், டி.எஸ். கிருஷ்ணவேணி, பாத் சங்கர் என பலர் நடித்தனர். துறையூர் ராஜகோபால சர்மா இசை அமைத்தார். பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதினார். கொல்கத்தாவில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் நாயகியின் தோழியாக சிறிய வேடத்தில் முன்னாள் முதல்வர் வி.என்.ஜானகி நடித்திருந்தார். 1941-ம் ஆண்டு செப்.4-ல் மதுரை,திருச்சி, கோவையில் வெளியான இந்தப் படம் சென்னையில் அக்.17-ம் தேதி வெளியானது. சிறந்த நடிப்பு மற்றும் பாடல்களுக்காகப் படம் பேசப்பட்டாலும் வெற்றி பெறவில்லை.