மானாமதுரை: நண்பர் அண்ணாமலையே கூறினாலும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: என்னை சந்திக்கவே தயங்கும் பழனிசாமி, எங்களுடன் எப்படி கூட்டணி சேருவார்? அமித்ஷா அனைவரையும் ஓரணியில் இணைக்க முயற்சித்தார். ஆனால் பலனில்லை.
அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா கூறினார். அப்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பொருத்து ஆதரவு அளிப்போம் என்று நான் கூறினேன். ஓபிஎஸ் செல்போன் அழைப்பை ஏற்காமல் தவிர்த்த நயினார் நாகேந்திரன், தற்போது சமரசம் பேசப் போவதாகக் கூறுவது அகங்காரம், ஆணவத்தைக் காட்டுகிறது.
எனக்காக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்த ஓபிஎஸ்-ன் சுய கவுரவத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டதால், நான் குரல் கொடுக்கிறேன். எங்களின் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக அரசியல் தெரியாதவர்கள்தான் கூறுவர். நாங்கள் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்ல அண்ணாமலை காரணமல்ல. அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்தார்.
பழனிசாமி தலைமையை ஏற்பது தற்கொலைக்குச் சமம். அதிமுகவுடன், அமமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள். அமமுக தொண்டர்களின் எதிர்காலம் கருதி நான் நல்ல முடிவு எடுப்பேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓபிஎஸ், அமமுக வெளியேற நயினார் நாகேந்திரன்தான் காரணம். பழனிசாமி மட்டும் போதும் என்று அவர் கருதுகிறார்.
தமிழக மக்களின் மனநிலை அவருக்கும், அவரைச் சார்ந்தோருக்கும் புரியவில்லை. எங்களை அழித்துவிட்ட நயினாரை வெற்றிபெறச் செய்ய நாங்கள் முட்டாள் அல்ல. நண்பர் அண்ணாமலையே கூறினாலும், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. பழனிசாமியை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும், நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
எங்களை விமர்சிக்காத வரை, விஜய்யை நாங்கள் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் மக்கள் விரும்பும் நடிகர். அவரைப் பார்த்து பொறாமைப்படத் தேவையில்லை. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி தமிழகத்தில் அமைய வாய்ப்பு இருக்கிறது.
நாங்கள் இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும். துரோகம் செய்த பழனிசாமி உள்ளிட்ட சிலரைத் தவிர, மற்றவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை. அவர்கள் தொடர்ந்து அமைதி காத்தால், வரும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும். தேர்தலுக்கு முன்பே விழித்துக்கொள்ள வேண்டும்.
தங்களிடம் இரட்டை இலை சின்னம் இருக்கிறது; பண பலம் இருக்கிறது என்று கருதி தேர்தலைச் சந்தித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அமமுக நிர்வாகிகளை பழனிசாமி விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.