திண்டுக்கல்: திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக ஞாயிறு மாலை ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சின்னாளபட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: “திமுக ஆட்சி அமைந்து 52 மாத காலம் நிறைவடைந்துவிட்டது. ஆத்தூர் தொகுதியில் எந்த ஒரு பெரிய திட்டம் கூட கொண்டுவரவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்தஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 350 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி அமைத்த அரசு அதிமுக அரசு. இது போன்று ஒரு பெரியத் திட்டத்தையாவது இங்குள்ள அமைச்சர் கொண்டுவந்திருக்கிறாரா?
சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என அதிமுக மத்திய அரசிடம் கோரிக்கைவைப்போம். அதை நிறைவேற்ற அதிமுக முயற்சி எடுக்கும். பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை மதுரை விமானநிலையத்திற்கு வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு தமிழகத்தில் சீரழிந்துவிட்டது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த போலீஸார் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்கின்றனர். டிஜிபி அலுவலகத்திற்கு முன்பாகவே ஒருவர் தாக்கப்படுகிறார் என்றால் தமிழக மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இப்படி அவல ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்படுகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. தமிழக அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி இருக்கும்வரை மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. திமுகவை சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற பெண் தலைவர் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருடுகிறார். ஊராட்சி மன்ற தலைவராக திருட்டு வழக்கில் ஈடுபடுவரை திமுக தேர்ந்தெடுக்கிறது. இந்த கட்சியின் யோக்கியதை என்ன என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. எதுகிடைக்கிறதோ இல்லையோ போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. பலமுறை எச்சரிக்கைவிடுத்தும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இதற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம். போதை நடமாட்டத்தை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் என பலமுறை சட்டமன்றத்தில் கருத்தை தெரிவித்தோம். ஆனால் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு செயலற்ற, திறமையற்ற அரசாங்கம், ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறார். அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி ஒன்றியத்தில உள்ள நிதிகளை எடுத்து வேறுதிட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பயன்படுத்துகிறார். ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மக்களுக்கு நிறைவேற்ற நிதிதேவை ஆனால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேறு பணிக்கு செலவழிக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தது. எந்த அரசாங்கமும் இதுபோன்று ஊராட்சி நிதியை வேறு பணிக்கு செலவிட்டதில்லை. அதிமுக கட்சி தோற்றுவித்ததே ஏழைமக்கள் வாழ்வு சிறக்கவேண்டும் என்பதற்காக ஏழைகளை வாழவைத்தது அரசு அதிமுக அரசு. மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்சி செய்யும் அரசு அதிமுக அரசு.
குடும்பத்திற்காக உள்ள கட்சி திமுக. அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. இந்த கம்பெனிக்கு கருணாநிதி ஓனராக இருந்தார். இவருக்கு பிறகு அந்த கம்பெனிக்கு ஸ்டாலின் இருக்கிறார். இவருக்கு பிறகு உதயநிதி வர துடிக்கிறார். அது குடும்ப கட்சியாக சுருங்கிவிட்டது. இப்படி ஒரு கட்சி தேவையா? உதயநிதி என்றாவது கட்சிக்கு உழைத்திருக்கிறாரா, சிறைக்கு சென்றுள்ளாரா? அவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் அவ்வளவுதான்.
அமைச்சர் ஐ.பெரியசாமி திமுகவிற்கு எவ்வளவோ உழைத்திருப்பார். திண்டுக்கல் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதியை நடுவில் அமரவைத்தனர். அந்த நிகழ்ச்சியில் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஓரமாக உட்காரவைத்துவிட்டனர்.
மனு வாங்கிச்சென்றவர்கள் ஒன்றையும் தீர்க்கவில்லை. கட்சியில் உழைப்பவர்களுக்கு திமுகவில் வேலையில்லை. முக்கிய பதவிகளை திமுகவில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களே எடுத்துக்கொண்டனர். நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி உள்ளார். வேறு யாரும் இந்த கட்சியில் இல்லையா? திமுக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அல்ல. மக்களை பற்றி கவலைப்படாத அரசு திமுக அரசு. அதிமுகவில் சாதாரண நபர் கூட பொதுச்செயலாளர், எம்எல்ஏ. எம்.பி., ஆகலாம். ஏன் முதலமைச்சரே ஆகலாம். இதுபோல் திமுகவில் ஸ்டாலினால் சொல்லமுடியுமா? எம்ஜிஆர்., ஜெயலலிதா சாதாரண தொண்டர்களை கூட எம்எல்ஏ., அமைச்சர் ஆக்கினார்கள்.
திமுகவில் அமைச்சரின் பையன் தான் எம்எல்ஏ ஆகமுடியும். கள்ளக்குறிச்சியில் வீடுவீடாகச்சென்று பெயிண்ட் அடிப்பவர் இன்று அதிமுக எம்எல்ஏ., சாதாரண ஏழைகளும் அதிமுகவில் எம்எல்ஏ ஆக முடியும். திமுகவில் அமைச்சர் ஐ.பெரியசாமி மகன் எம்எல்ஏ., நேரு மகன் எம்.பி., பொன்முடி மகன் எம்பியாக இருந்தார். முந்தைய அரசாங்கம் செயல்படுத்திய நல்ல திட்டங்களை அடுத்துவரும் அரசாங்கம் செயல்படுத்தவேண்டும். அதுதான் நல்ல அரசாங்கம். ஒவ்வொரு தீபாவளிக்கும் சேலை வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கொடுத்தோம். தேக்கமடைந்த கைத்தறி துணிகளை விற்க ரூ.350 கோடி மானியம் கொடுத்தோம். 2019 ல் ஜவுளி கொள்கையை அறிவித்தோம். கைத்தறி நெசவாளர்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்தோம். திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தக்க தூர்வாரப்பட்டது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. குடகனாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் துணை அணை கட்டப்பட்டது. உங்கள் கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்” இவ்வாறு பழனிசாமி பேசினார். தொடர்ந்து ஒட்டன்சத்திரம், பழநியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
எதிர்ப்பு தெரிவித்த பார்வர்டு பிளாக் கட்சியினர்: சின்னாளபட்டியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டபோது, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர், வன்னியருக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கட்சி கொடி மற்றும் கருப்புகொடியை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.