டிடிவி.தினகரன், அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக கருத்து சொல்ல நான் தகுதியானவள் அல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூழ்கும் கப்பலில் உட்கார்ந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை மூழ்கும் கப்பல் என்கிறார். 2026 தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை தொடர்வாரா என்பதே அவருக்குத் தெரியாது. செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்யும் அளவுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனமானது அல்ல. அவர் மீது எத்தனை வழக்குகள், குற்றச்சாட்டுகள் உள்ளது என்பது அவருக்கே தெரியும். முதலில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ளட்டும். பிறகு அவர் எங்களைப் பற்றி விமர்சிக்கட்டும். நயினார் நாகேந்திரனின் மகன் 2014-ல் இருந்தே பாஜகவில் இருக்கிறார். குறிப்பாக, நயினார் நாகேந்திரனுக்கு முன்பாகவே அவரது மகன் பாஜகவல் இணைந்தவர்.
பாஜக குடும்ப கட்சியில்லை: திமுக தலைவர் ஸ்டாலினைப் போல, மூத்த தலைவர்களை புறந்தள்ளிவிட்டு தனது மகனுக்கு பொறுப்பு வழங்கவில்லை. பாஜகவில் வேலை செய்தால், அனைவருக்கும் பொறுப்பு கிடைக்கும். பாஜக குடும்ப கட்சி அல்ல.
அண்ணாமலை தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக வழிநடத்தப்பட்டது. நயினார் நாகேந்திரன் அவ்வாறு வழிநடத்தவில்லை என்று டிடிவி.தினகரன் கூறியது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு கருத்து சொல்ல நான் தகுதியானவள் அல்ல. அதேபோல, அதிமுக உட்கட்சி பிரச்சினை குறித்தும் கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை.
எல்லா பிரச்சினைகளும் தேர்தலுக்கு முன்பு தீர்வு காணப்பட்டுவிடும். அனைவரின் குறிக்கோள் திமுக தோற்க்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான். 2026 தேர்தலில் நாங்கள் பலம் பொருந்தியவர்களாகத்தான் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.