ஈரோடு: கோபி அதிமுக கட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 6-ம் தேதி கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கோபி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்த சிலரையும் நீக்கினார் இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் நேற்று நம்பியூர் பகுதியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர்.
அதனைத் தொடர்ந்து இன்றும் கோபி அதிமுக கட்சி அலுவலகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு இரண்டாவது நாளாக கடிதம் அனுப்பி வருகின்றனர்.
ராஜினாமா செய்தவர்கள், அதிமுக பழைய வலிமையை பெற வேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். என கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கூறியிருந்தார். அதற்கு தாங்கள்( பொதுச்செயலாளர் ) அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுகிறோம் எனவும் கட்சி ஒன்றுபட்டால் பதவியில் நீடிப்போம் என்றும் அவர்கள் ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்பியுள்ளனர் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி சத்யாபாமா கூறுகையில், “மக்களுக்காக நினைத்த திட்டங்கள் செய்ய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த இயக்கம் ஒன்றுபட பாடுபடுவோம். வெற்றியை ஜெயலலிதா பாதத்தில் சமர்ப்பிப்போம். பலரும், ராஜினாமா செய்து வருவதால் எவ்வளவு பேர் என்று போகப்போகத் தான் தெரியும். ராஜினாமா செய்பவர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்கிறார்கள்.
நான் எனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான சத்யாபாமா தெரிவித்துள்ளார்.

