தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, செப்.9-ம் தேதி முதல் அக்.19-ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்ட்ரல் – பரங்கிமலை வழித்தடத்திலும் (பச்சை வழித்தடத்திலும்), விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்திலும் (நீல வழித்தடத்திலும்) தண்டவாள பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இரண்டு வழித் தடங்ளிலும் செப்.9 முதல் அக்.19-ம் தேதி வரை காலை 5 முதல் 6:30 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.
இந்த காலகட்டத்தில் ரயில்கள் காலை 5 முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப் படும். காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித் தடங்களில் பராமரிப்புப் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த மாற்றத்துக்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ரயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்துக்கு மிகவும் அவசியம். பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் உதவிக்கு, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

