தேனி / திருநெல்வேலி / தஞ்சாவூர் / திண்டுக்கல்: அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக பிரிந்து கிடப்பதால்தான் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலை மாற வேண்டும் எனில், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதிமுக தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது.
மூத்த முன்னோடி செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உயர் பொறுப்புகளை வகித்தவர். அதிமுகவுக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செல்பவர். அவரது கருத்து சரிதான். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். அவருடைய எண்ணம் நிறைவேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்களும் தொடர்ந்து முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
யாருடைய குரலும் இல்லை… பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை. அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும்.
அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம். அதிமுக இணைப்பு குறித்து பழனிசாமிதான் பேச வேண்டும். தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்ற மனதுடன், செங்கோட்டையன் கூறியதை வரவேற்கிறேன். செங்கோட்டையன் எங்களுடன் தொடர்பில் இல்லை.
அவர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவில்தான் உள்ளார். எனினும், செங்கோட்டையன் ஏற்படுத்தும் ஒன்றிணைப்புக் குழுவுக்கு எங்களை அழைத்தால், நாங்களும் செல்வோம். ஒன்றிணைப்புக்கு தடையாக இருப்பவர்கள் மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்” என்றார்.
பழனிசாமிக்கு கட்டுப்படுவோம்: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியது குறித்து பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முடிவெடுக்கவேண்டும். நாங்கள் பழனிச்சாமியின் கருத்துக்கு கட்டுப்படுவோம். அவரது முடிவே எங்கள் முடிவு” என்றார்.