சமூகநீதிக் கொள்கைகளை செயல்வடிவில் சாத்தியமாக்கியதற்கு சான்றுகளில் ஒன்றாக பழங்குடியினர் நலத்துறையின் கல்விசார் சாதனைகள் விளங்குகின்றன. இந்தியாவில் முதன்முறையாக, பழங்குடியின மாணவர்களின் கல்வி வாழ்க்கையில் ஒரு பிரம்மாண்டமான புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2025-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் ஈட்டியிருக்கும் வெற்றிகள், ஒரு நீண்டகால கனவின் நனவாக வெளிப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைவிட கூடுதலாக 20 மடங்கு அளவுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றிகளில் குறிப்பிடத்தக்க சில மைல்கற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதன்படி மாணவி ராஜேஸ்வரி, சென்னை ஐஐடியில் விண்வெளிப் பொறியியல் துறையில் சேர்ந்திருப்பதும் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி-யில் போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் பழங்குடியின மாணவிகள் முதன்முறையாக இடம் பிடித்திருப்பதும் பழங்குடி சமூகத்தில் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த சாதனைகளின் பின்னணியில், பழங்குடியினர் நலத்துறையின் தொடர்ச்சியான, அர்ப்பணிப்பு உள்ளது. மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்புகளும் ஆயத்தப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும் ஆங்கில மொழிப் புலமை, ஆளுமை மேம்பாடு, குழு விவாதம் போன்ற திறன்களை வளர்க்கவும் 15 நாட்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நீதி என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவது என்பதை இந்திய சமூக அமைப்புக்கே ஒரு புதிய திசையை பழங்குடியினர் நலத்துறை காட்டியுள்ளது.
அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் லட்சுமி பிரியா ஐஏஎஸ் கூறும்போது, “மாணவர்களின் இந்தச் சாதனைக்குத் தமிழக முதல்வர் ஆசிரியர்களுக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும். உயர்கல்வி சேர்க்கைக்கான பயிற்சியையும் நிதியைத் தடையின்றி அரசு வழங்கியது. இதன் விளைவாக, மாணவர்கள் இலக்கை அடைந்தனர். எல்லாத் தடைகளையும் தகர்த்து, மாணவர்கள் சாதித்துள்ளனர்” என்றார்.
கிருஷ்ணவேணி (கரியகோயில்வளவு): பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கிடைத்த பயிற்சி மற்றும் திறன் பயிற்சிகள் பயனுள்ளதாக இருந்தன. இந்த முயற்சிகள் எங்கள் சமூகத்துக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதன் விளைவாக, எனக்கு ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகத்தில் ஏவியானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்துள்ளது.
ஆதித்யன் (செங்கரைப்பள்ளி): எனக்கு ஒரு புதிய பாதையைத் திறந்துவைத்த என் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், இத்துறையின் இயக்குநர், மற்றும் தமிழ்நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்போது நான் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (கொல்கத்தா) பி.டெக், கடல்சார் பொறியியல் படித்து வருகிறேன்.
ஞானபிரகாசம்: அம்மா தினக்கூலி வேலை பார்க்கிறார். எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கை கல்வி மட்டுமே. எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு எங்கள் குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தஅரிய வாய்ப்பை வழங்கிய அரசுக்கும், துறைச் செயலாளர் மற்றும் இயக்குநருக்கும் எனது நன்றிகள்.

எட்டாத உயர்கல்வியை எட்டிப்பிடித்த பழங்குடி மாணவர்கள்: தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் 42 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் – 39 பேர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்- 3, கிளாட் தேர்வு – 3, இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம்- 10, தேசிய ஹோட்டல் மேலாண்மை நிறுவனம்- 2, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்- 9, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்- 6, ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம்- 9, ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனம்- 4, பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி- 16, அண்ணா பல்கலைக்கழகம்- 6, புதுச்சேரி பல்கலைக்கழகம்- 8, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்- 1, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பாகல்பூர்- 3, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம்- 1, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஐடி, கோரக்பூர் – ஒரு மாணவர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.