சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை இனி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை கூடுதலாக சந்தைப்படுத்தும் வகையில் இனிவரும் நாட்களில் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படும்.
அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் இயற்கை சந்தையில் கிடைக்கும். அந்த வகையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் இயற்கை சந்தையை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, பொருட்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.