திருச்சி: பாஜக வளர்வது மற்ற கட்சிகளின் வீழ்ச்சியால் அல்ல என பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். வ.உ.சி. பிறந்த நாளையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்க அதிபர் உலகில் அதிக வரி விதித்திருப்பது இந்தியாவுக்குத்தான்.
வரி தீவிரவாதத்தை கையில் எடுத்ததால் அமெரிக்க அதிபரின் மரியாதை குறைந்திருக்கிறது. அதிக வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து பிரதமர் மோடி 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலமாக 160 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நாம் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கிறோம்.
இதில் இருந்து குறிப்பிட்ட அளவு வரி வருவாய் அமெரிக்காவுக்குச் செல்கிறது. எனவே, நாம் ஆன்லைனில் பொருட்களை வாங்காமல், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க வேண்டும். அதுவும் சுதேசி பொருட்களை வாங்க வேண்டும். செங்கோட்டையன் அதிமுகவில்தான் இருக்கிறார். அவரது உணர்வு எனக்குப் புரிகிறது.
ஒற்றுமையாக இருந்தால்தான் பலன் கிடைக்கும். செங்கோட்டையனின் வேண்டுகோள் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அனைவரும் கலந்து பேசினால் சரியாகிவிடும். தேசிய ஜனநாயக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல.
திமுக கூட்டணி 2021 தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தைவிட 2024 தேர்தலில் 8 சதவீதம் குறைவாகவே பெற்றது. அது, மேலும் குறைந்தால் திமுக கதை முடிந்துவிடும். பாஜக வளர்வது மற்ற கட்சிகளின் வீழ்ச்சியால் அல்ல. பாஜகவின் சித்தாந்தம், மத்திய அரசின் திட்டம் மற்றும் எங்களது உழைப்பால்தான் பாஜக வளர்கிறது என்றார்.

