ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமெரிக்காவின் தற்போதைய வரி விதிப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட காலணிகள் தேக்கமடைந்து, சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் அபாயம் உருவாகி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 1971-ம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் காலணி மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கு, உதவியாக பல சிறு தொழில் நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தோல் சார்ந்த பொருட்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, காலணிகள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீதம் வரி விதிப்பால் தோல் தொழிற்சாலைகள் மிகுந்த இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் சீனா, டென்மார்க், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கா வரிவிதிப்பால் அந்நாட்டுக்கு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் காலணிகள், ஏற்றுமதி செய்ய முடியாமல் இங்கேயே தேங்கி கிடப்பதாக கூறுப்படுகிறது. சப்ளை கொடுத்தவர்கள் வரி விதிப்பினால் அதனை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்.
இதனால், தொழிற்சாலை உரிமையாளர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இதனால், உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டமும், தொழில் முடங்கும் நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில் செய்வதற்காக வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று தொழிற்சாலையை நடத்தி வரும் சூழலில் இந்த அறிவிப்பு தங்களுக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் தரப்பில் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், பண்டிகை நாட்கள் வரும் சூழலில் உற்பத்தி குறைத்துள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தொழிற் சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வரி சுமையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

