சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள் என்று ‘பிளாக்மெயில்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனஞ்ஜெயன் பேசியுள்ளார்.
ஜே.டி.எஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. மு.மாறன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் வெளியீட்டு உரிமையினை தனஞ்ஜெயன் கைப்பற்றி செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடவுள்ளார்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு, ஜி.வி.பிரகாஷ் இயக்கிய இயக்குநர்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் தனஞ்ஜெயன் பேசும் போது, “சில காரணங்களால் இந்தப் படம் தள்ளிப்போனது. பின்பு நான் படம் பார்த்தபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள்.
படம் பார்த்து முடித்ததும் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். எப்படி பிளாக்மெயில் செய்கிறார்கள், எப்படி கடத்துகிறார்கள் என பல லேயர்களில் கதை செல்லும். லிங்கா, பிந்து மாதவி, தேஜூ, ரமேஷ் திலக், முத்துக்குமார் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். யதார்த்தமாக நமது வாழ்வில் நடக்கும் விஷயங்களை வைத்து நல்ல த்ரில்லர் படம் கொடுத்துள்ளார் மாறன். அமல்ராஜ் சாருக்கு 12ஆம் தேதி நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். மாறன் பொறுப்புணர்ச்சியோடு ஒரு படம் கொடுத்திருக்கிறார்.
சினிமா சுற்றி பல நெகட்டிவான விஷயங்கள் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வரும்போது அதை கெடுக்க வேண்டும் என பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிதான் ஒரு படம் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால், சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள். நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்துதான். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை நெருங்குவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. சம்பளமே வாங்காமல் கூட நடிப்பார். ஏனெனில், நடிப்பது அவருக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜிவி பிரகாஷ்” என்று தனஞ்ஜெயன் பேசியுள்ளார்.

