தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ நாட்கள், விடுமுறை காலங்கள், திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் கூட (வியாழன் முதல் ஞாயிறு வரை) பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இக்கோயிலில் பொதுதரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகளில் தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்படுத்த உத்தேசித்து அறிவிப்பாணையை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு எண் 206-ல் பக்தர்கள் பெருவாரியாக வரும் கோயில்களில் தினசரி ஒரு மணிநேரம் இடைநிறுத்த தரிசன வசதி (பிரேக் தரிசனம்) ஏற்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டண சீட்டில் இடை நிறுத்த தரிசனம் நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதில் தைப்பூசம் (5 நாள்), மாசித்திருவிழா (10 நாள்), பங்குனி உத்திர திருவிழா (3 நாள்), சித்திரை வருட பிறப்பு (1 நாள்), வைகாசி விசாகம் (5நாள்), ஆவணி திருவிழா (5 நாள்), நவராத்திரி உற்சவம் (5 நாள்), கந்த சஷ்டி திருவிழா (10 நாள்), அமாவாசை, பவுர்ணமி (வருடத்துக்கு 24 நாள்) என மொத்தம் 68 நாட்களும், நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்களிலும் பிரேக் தரிசனம் கிடையாது.
இதுகுறித்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் இருப்பின் கோயில் இணை ஆணையருக்கு பக்தர்கள் எழுத்து பூர்வமாக செப். 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் கோடிக்கணக்கி்ல் வருவாய் வரும் நிலையில் ரூ.500 கட்டண தரிசன முறையை அமல்படுத்துவது தேவையற்றது என அவர்கள் கூறினர்.