புதுடெல்லி: பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்காது என நினைக்கிறேன். இந்தியா மீது அதிக வரி விதிப்பது எதிர்பார்த்த பலனை தராது என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. உள்நாட்டில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதுநாட்டில் நுகர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் ஏற்படும் ஏற்றுமதி இழப்பை, உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு நுகர்வு அதிகரித்து, ஏற்றுமதி பாதிப்பை குறைக்கும்.
இந்த நிதியாண்டில் முதல் 4 மாதத்தில், வரி இல்லாமல் ஏற்றுமதி நடைபெற்றது. அமெரிக்காவின் கூடுதல் 25 சதவீத வரி விதிப்பால் ஏற்படும் தாக்கம், இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில் தெரியவரும். அதனால், உள்நாட்டில் நுகர்வை அதிகரிப்பதுதான், நாம் மேற்கொள்ள வேண்டிய கடுமையான பணி. இவ்வாறு அவர் கூறினார்.