திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு நேற்று தேனி மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் தேனி மாவட்ட பிரச்சாரத்தை முடித்து கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். ஓய்வுக்கு பின் இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒரே அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நேற்று செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள தனியார் ஓட்டலில் போலீஸார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.