சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக தென் சென்னை அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரான வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ஆவின் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஆவின் பாலை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக தண்ணீரை கலப்படம் செய்து மோசடி செய்ததாக அதிமுக அப்போதைய தென் சென்னை மாவட்டச் செயலாளரான வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட 28 பேர் மீது விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை: இந்நிலையில் தங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ரேவதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பாக நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை, என வாதிட்டார்.
அதேபோல அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் எந்தவொரு கலப்படமும் நடைபெறவில்லை என்றும், ஆவின் பால் திருடப்படவில்லை என்றும், டேங்கர் லாரிக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்படவில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.
எந்த ஆதாரமும் இல்லை: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதால் எந்த பலனும் இல்லை எனக்கூறி கடந்த 2014-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.