புதுடெல்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், தங்க நகைகள், ரத்தின கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், ரசாயனங்கள், இன்ஜினீயரிங் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான ஆர்டர்கள் நிறுத்தப்பட்டதால் ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும்.சிறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பணப்புழக்க பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், செயல்பாட்டு மூலதனத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல், ஏற்றுமதி தொடர்புடைய துறைகளில் வேலை பாதுகாப்பை உறுதி செய்தல், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி, உற்பத்தி தடைபடாமல் இருக்கச் செய்தல் என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை போன்று இது இருக்கும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க அரசின் வரி விதிப்பை தொடர்ந்து உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருகிறது.