அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும் நிலையில், அவர் பெயரில் இயங்கும் அதிமுக அந்த நாளில் முக்கிய திருப்பத்தைச் சந்திக்குமா என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பிவிட்டிருக்கிறார் செங்கோட்டையன்.
அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்பது நீக்கப்பட்டவர்கள் தரப்பு வாதமாக இருந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விசுவநாதன், அன்பழகன் ஆகியோர், இபிஎஸ்ஸை சந்தித்து இதே வாதத்தை முன்வைத்தனர். ஆனால், நீக்கப்பட்டவர்கள் சொன்னதை மட்டுமல்லாது, தன்னுடைய சகாக்கள் சொன்ன வாதத்தையும் இபிஎஸ் ஏற்கவில்லை.
இந்த சம்பவத்திற்கு பிறகு, ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்பது போல், இணைப்பு தொடர்பாக இபிஎஸ்ஸிடம் யார் பேசுவது என்ற தயக்கம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் தான், நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என, மனம் திறந்திருக்கும் செங்கோட்டையன், அதற்கான முயற்சிகளைத் தொடங்க 10 நாள் கெடுவும் விதித்துள்ளார்.
எம்ஜிஆர் காலத்து மூத்த நிர்வாகி, நீண்ட அரசியல், தேர்தல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சீரியஸாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், அதிமுக வட்டாரமோ எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறது. ஓபிஎஸ், சசிகலா, வைத்திலிங்கம் போன்ற அதிருப்தியாளர்களிடம் இருந்து மட்டுமே வரவேற்பு வந்துள்ளது. தேர்தல் ஆதாயம், கட்சி பொறுப்பு போன்ற காரணங்களால், அதிமுக நிர்வாகிகள் இந்த விஷயத்தில் மூச்சுவிடாமல் இருக்கிறார்கள்.
அதேசமயம், பதவிகளில் இல்லாத அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் செங்கோட்டையனின் உரிமைக்குரல் விவாதப் பொருளாகி இருக்கிறது. “இணைப்பு குறித்து 5 முன்னாள் அமைச்சர்களுடன் நான் பேசியதற்கு பிறகு, கட்சி தொடர்பான பொதுவான கருத்துகள் குறித்து இபிஎஸ் என்னிடம் பேசியதில்லை” என்ற செங்கோட்டையனின் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. இணைப்பு குறித்தான சந்திப்பிற்கு செங்கோட்டையனே தூண்டுதலாக இருந்துள்ளார் என முடிவு செய்த இபிஎஸ், அதன் பிறகு அவருக்கான முக்கியத்துவத்தை முழுமையாகக் குறைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
இதன் உச்சமாக, இந்த முறை கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவலும் இபிஸ் தரப்பில் இருந்து கசியவிடப்பட்டது. அதோடு, அவர் திமுக-வில் சேரப்போகிறார் என்றும் வதந்திகள் சமீபத்தில் உலாவரத் தொடங்க, பொறுமை கடந்த செங்கோட்டையன் பொங்கிவிட்டார் என்கின்றனர் அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்களை அறிந்தவர்கள்.
மேற்கு மண்டலமான கோவையில் இருந்து, இபிஎஸ் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய நிலையில், “2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கும்” என கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் சூசகமாக ஒரு சேதியைச் சொன்னார். தற்போது மேற்கு மண்டலத்தின் அதிமுக தளகர்த்தரான செங்கோட்டையன் ’வாய்ஸ்’ கொடுத்திருப்பதை அத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ‘என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது’ என்று தான் பாடத்தோன்றுகிறது.
இதனிடையே, ஒருவேளை பாஜக கூட்டணியை அதிமுக உதறித்தள்ளினால் செங்கோட்டையன், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் வகையறாக்களை வைத்து பாஜக சித்துவிளையாட்டுக் காட்டும். கடைசி நேரத்தில் எதுவுமே ஒத்துவராமல் செங்கோட்டையன் கைவிடப்பட்டால் திமுக அவரை கைகொடுத்து தூக்கிவிட்டு கோல் அடிக்கவும் தயங்காது என்றெல்லாம் செங்கோட்டையன் வாய்ஸ் குறித்து செய்திகள் பலவாறாக சிறகடிக்க ஆரம்பித்துவிட்டன.