சென்னை: சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். கன்னியாகுமரி மாவட்ட மாணவி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.
இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இவைதவிர 29 தனியார் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
இந்நிலையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். துறை செயலர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி, இணை இயக்குநர் மணவாளன், தேர்வுக்குழு செயலர்கரோலின், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தரவரிசை பட்டியல்கள் என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மாணவி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,371 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், நீட் தேர்வில் 720-க்கு 520 மதிப்பெண் எடுத்த கன்னியாகுமரி மாவட்ட மாணவி டி.எஸ்.பிரகதி முதலிடம் பெற்றுள்ளார். 512 மதிபெண்களுடன் ஜி.டி.இனிய சுதர்சன் 2-ம் இடத்தையும், 509 மதிப்பெண்களுடன் ஆர்.பாவேஷ் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,430 பேரும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 1,860 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 97 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தரவரிசைப் பட்டியலில் 425 மதிப்பெண்களுடன் ஜி.பாவனா முதலிடத்தையும், 423 மதிப்பெண்களுடன் என்.அருண்குமார் 2-ம் இடத்தையும், எஸ்.அன்பரசி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.