நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். இதில் அரினா சபலென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான இறுதிப் போட்டியில் அரினா சபபெலன்கா, 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். அமண்டா அனிசிமோவா அரை இறுதி ஆட்டத்தில் 4 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும் 23-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதினார். 2 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனிசிமோவா 6-7 (4-7), 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பாம்ப்ரி ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோ சாலிஸ்பரி ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 7-6 (2) 6-7(5) 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.