மாமல்லபுரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய 16 கேள்விகளுக்கு எந்த பதிலையும் தெரிவிக்கப்போவதில்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக 16 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பிலிருந்து, அன்புமணியிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கான காலக்கெடு, கடந்த ஆக. 31-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், 10-ம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்குவதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராமதாஸ் எழுப்பியுள்ள எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்போவதில்லை என அன்புமணி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அன்புமணியின் நடைபயணம், வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் செல்வக்குமார், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலம் சிவக்குமார், தர்மபுரி வெங்கடேசன், மேட்டூர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.