சென்னை: சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் செப்.15-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் துரைமுருகன், கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது 2007-09 வரையிலான காலகட்டத்தில் ரூ.1.40 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் துரைமுருகன் மீதும், அவரது மனைவி சாந்தகுமாரி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு: இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி இருவரும் விடுத்த கோரிக்கையை ஏற்று இருவரையும் விடுவித்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரி ஆகிய இருவரையும் விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை மறுவிசாரணை செய்து 6 மாதங்களுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு வேலூரில் இருந்து சென்னையில் உள்ள 10-வது ஊழல் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
எலும்பு முறிவு: இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் நீதிபதி இ.பக்தவச்சலு முன்பாக விசாரணைக்கு வந்த போது இருவரும் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த வழக்கை வேலூருக்கு மாற்றக்கோரியும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து துரைமுருகனுக்கு விலக்கு அளிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து கடந்த செப்.3 அன்று உத்தர விட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இ.பக்தவச்சலு முன்பாக இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை. அவரது மனைவி சாந்தகுமாரி மட்டும் ஆஜரானதால் பிடிவாரன்ட் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை என்பதால், வரும் செப்.15-க்குள் அவர் ஆஜராக வேண்டும் என்றும், ஒருவேளை ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்டை அமல்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.