சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தின் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 70 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படிக்க செல்கின்றனர். இதை ஆசிரியர்கள் 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியருக்கான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தி வருகிறது. விருதாளர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 396 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தவிர, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலமாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான 2,810 பேருக்கு பணி நியமனம் வழங்குவதன் அடையாளமாக 40 பேருக்கு நியமன ஆணைகளையும் உதயநிதி வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. பகுத்தறிவு, சுயமரியாதைக்கான ஆசிரியர் பெரியார். ‘முரசொலி’யை தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தார் கருணாநிதி. அந்த வழியில், திராவிட மாடல் என்ற மிகப்பெரிய தத்துவத்தின் ஆசிரியராக செயலாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மற்ற கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்வார்.கல்வி மூலமாகவே சமூக மாற்றத்தை கொண்டுவர முடியும். அதிகாரமிக்க கல்வியை மாணவர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் நீங்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான். அறிவார்ந்த சமூகத்தை ஆசிரியர்களால்தான் உருவாக்க முடியும்.
எனவே, மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். சமூக நீதி, பகுத்தறிவை பயிற்றுவிக்க வேண்டும். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 70 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படிக்க செல்கின்றனர். இதை ஆசிரியர்கள் 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆசிரியர்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். நீங்களும் அரசுக்கு அதிக ஆதரவை தரவேண்டும்.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சிலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் வாழ்த்து: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், ‘ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். பிள்ளைகளும் பெற்றோரைவிட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகின்றனர். அந்த மாணவர்களுக்கு தமிழ், அறம், அரசியல், அறிவியல் என அனைத்தையும் கற்பித்து அவர்களது உயர்வுக்காக பாடுபடும் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.